‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் இனிமையானவை. கப நோய்களைப் போக்குவதற்கு இயற்கை வழங்கிய கசப்பான பிரசாதமாக ஆடாதோடையைப் பார்க்கலாம்.
பெயர்க் காரணம்: இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம். ‘Adhatoda vasica’ என்பது தாவரவியல் பெயர்.
அடையாளம்: பசுமைமாறா புதர்ச்செடி வகையான ஆடாதோடையை, வேலியோரங்களில் காண முடியும். கரும்பைப் போலவே ஆடாதோடையும் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம்.
அலோபதியிலும்: வாசிசின் (Vasicine), வாசிசினால் (Vasicinol), டானின்ஸ் (Tannins), சப்போனின்ஸ் (Saponins) போன்றவை ஆடாதோடையில் இருக்கும் வேதிப்பொருட்கள். நவீன மருத்துவத்தில் சளி, இருமலைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் சிரப்களில் உள்ள மூலப்பொருள் ‘புரோம்ஹெக்சின்’ (Bromhexine). கோழையகற்றி செய்கையுடைய இது, எதிலிருந்து பிரிதெடுக்கப்படுகிறது தெரியுமா? ஆடாதோடை இலைகளில் மறைந்திருக்கும் ‘வாசிசின்’ எனும் வேதிப்பொருளிலிருந்துதான்! காசநோய் சார்ந்த மருத்துவ ஆய்வில், ஆடாதோடையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதிப்பொருட்கள் சிறப்பாக வேலை செய்வதாகத் தெரியவந்துள்ளது.
மருந்தாக: கசப்புத் தன்மை மிகுந்திருப்பதால் ஆடாதோடை இலைகளை மணப்பாகு, குடிநீர் போன்ற வடிவங்களில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் காய்ச்சல் நோய்களுக்காகச் செய்யப்படும் குடிநீர் வகைகளில் ஆடாதோடை தவறாமல் சேர்க்கப்படுகிறது. விஷ முறிவு மருந்துகளிலும் இதன் பங்கு உள்ளது.
வீட்டு மருத்துவம்: ஆடாதோடை இலைகளில் இருக்கும் ‘வாசிசின்’ (Vasicine) எனும் வேதிப்பொருளுக்கு, நுரையீரல் பாதையை விரிவடையச் செய்யும் தன்மை உண்டு. நறுக்கிய ஆடாதோடை இலைகள் இரண்டு, மிளகுத் தூள் ஐந்து சிட்டிகை, கடுக்காய்த் தூள் ஐந்து சிட்டிகை ஆகியவற்றை நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால், ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். குளிர் காலத்தில் நோய்த் தடுப்பு உபாயமாகவும் இதைப் பயன்படுத்தலாம். ஆடாதோடை, அதிமதுரம், சீந்தில், ஏலம், மிளகு சேர்ந்த கலவையைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் காய்ச்சிப் பருகினால் மூக்கில் நீர்வடிதல், தலைபாரம், சளி, வறட்டு இருமல் போன்றவை குணமாகும்.
வளர்ப்பும் பயன்பாடும்: ஆடாதோடையின் சிறு தண்டுகளை மண்ணில் சரிவாகப் புதைத்து, பசுஞ்சாணத்தை முனையில் வைத்துத் தொடர்ந்து நீர் ஊற்றினாலே பெருஞ்செடியாக விரைவில் வளர்ந்துவிடும். செடியிலிருந்து நேரடியாக இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம். இல்லையெனில் இலைகளை உலரவைத்து, பொடித்து வைத்துக்கொண்டு அவசியம் ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆடாதோடை கபநோய்களைத் தடுத்து, குரலுக்கு வலிமையைக் கொடுக்கும். ‘கர கர’ இருமலைத் தடுத்து, ‘கணீர்’ குரல் வளத்தைக் கொடுக்கும் ஆடாதோடை, பசுமை குன்றாத ‘இயற்கையின் பாடகி!’
கட்டுரையாளர்,
அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
டாக்டர் வி.விக்ரம் குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு சித்த மருத்துவர். ‘நலம் வாழ’ இணைப்பிதழில் ஏற்கெனவே அவர் எழுதிய கட்டுரைகள் ‘தி இந்து’ வெளியீடாக ‘மரபு மருத்துவம்’ என்ற நூலாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் மரபுப் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் இணைத்து எழுதுவது இவரது சிறப்பு.