சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ வளர்ச்சிக்குக் கொடையாகக் கொடுத்தது தடுப்பூசி (vaccine) எனலாம்.
இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம் என்பதை அமெரிக்காவின் பிலடெல்பியா மருத்துவ சங்கம் (இணைய தள முகவரி www.history of vaccine.com ) தரும் தகவல் மூலம் அறியலாம். கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை (small box) வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் தடுக்கும் (inoculation) வழக்கம் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (நூல் ஆதாரம்: The History of inoculation and vaccination XVIIth international congress of medicine, London 1913, பக்கம் 18-24 ). இம்முறை தற்காலத் தடுப்பூசி முறை பிறக்க வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
கண்புரை அறுவைசிகிச்சை
கண்புரை (cataract) அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்சு கண் மருத்துவர் Dr. Jacques Daviel தஞ்சை சரபோஜி மன்னரின் கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் தொடர்பான ஓவியங்களைப் பார்த்த பின், அதிலிருந்து ஏற்பட்ட புரிதலின் அடிப்படையில் கண்புரையை நீக்கும் சித்த மருத்துவமுறையை couching என்ற பெயரில் நடைமுறைப்படுத்தினார். ஆதாரம் (Inventor of the extracapsular cataract extraction surgery klin oczna 2005 107(7-9) பக்கம் 567-571).
வெறிநாய்கடி, பாம்புக்கடி மருந்து
டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை’ என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கிவந்தது 1788 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைகாலுக்கு நன்கு பயன் தருகிறது என்று சென்னை மாநில கவர்னர் Sir Archibad Campbell, ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். சென்னை மாகாணத்தின் முதல் ஆங்கில வார இதழான மெட்ராஸ் கூரியரில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாத்திரைகளை வேலூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் William Duffin பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானதை, தன் கடிதம் மூலம் ராணுவ மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறார். (ஆதாரம்: Dr. Duffin Minute to the Hospital Board 17.11.1788, பக்கம் 238-41)
தஞ்சாவூர் மாத்திரை என்ற (Tanjore Pills) சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Current science vol.16, No. 12, 25.06.2014). ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ. 6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையைப் பரம்பரை வைத்தியர் விளக்கினார். இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்குக் காரணமாகிவிட்டது.
250 வருட காத்திருப்பு
தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் வந்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பாதிரியார் கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது.
பாம்புக்கடிக்கு விஷமுறிவு (Anti Snake Venom) மருந்துகள் தயாரிப்பதில் பாம்பு விஷத்தைச் சேகரித்தல், பிறகு அதை குதிரைக்கு வழங்கி, நோய் எதிர்ப்புப் பொருளை தயாரிப்பதில் உயிர் பாதுகாப்புச் சட்ட நடைமுறை என்கிற சிக்கல் உள்ளது. அதற்குச் சிறந்த மாற்றாக தஞ்சாவூர் மாத்திரை அமையும். வெள்ளைப் பாடணம் (Arsenic trioxide) என்ற சித்த மருந்து, ரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாக (Acute mylotic Leukemia) மீண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதுபோல், தஞ்சாவூர் மாத்திரையும் பாம்புக்கடிக்கு மருந்தாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாம்புக்கடி மற்றும் வெறிநாய்க்கடி நோய் என்ற சவாலான இரண்டு நோய்களுக்கு மீண்டும் ஆய்வுகளை முடுக்கிவிட்டு தஞ்சாவூர் மாத்திரையை மேம்படுத்திக் கண்டுபிடித்தால், தமிழ் மருத்துவத்துக்கு உயரிய விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
நாசாவில் குருமூலிகை
சித்த மருத்துவத்தில் குருமூலிகை என்று சித்தர்கள் கொண்டாடும் திருநீற்றுப் பச்சிலை, பல உலோகங்களை நுண்ணிய துகள்களாக மாற்றப் பயன்படுத்தப்படுகிறது. திருநீற்றுப் பச்சிலையின் (Basil seed) விதைகளை ஜிகர்தாண்டா மற்றும் பலூடா போன்ற உணவு வகைகளில் சேர்த்து உட்கொண்டு வருகிறோம். அதேநேரம் குருமூலிகை என்று சித்தர்கள் சிறப்பித்த திருநீற்றுப் பச்சிலை விதை மட்டுமே விண்வெளியில் விரைவாக முளைக்கும் திறன் கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஓடத்தில் திருநீற்றுப் பச்சிலையின் விதைகளை ஆய்வு செய்து, இதை உறுதியும் செய்திருக்கிறது.
சந்திரனில் தாவர வளர்ப்புத் துறைக்குத் திருநீற்றுப் பச்சிலை மூலிகையை இலச்சினையாக (logo) அறிவித்தும் நாசா பெருமைப்படுத்தியுள்ளது. அப்படியானால் குருமூலிகை என்று சித்தர்கள் சொன்ன பொருள் உண்மைதானே. அந்த வகையில் குருமூலிகை மட்டுமல்ல, மூலிகைகளை அடிப்படையாகக்கொண்ட சித்த மருத்துவமும் முழு தாத்பரியம் அறியப்படாமல் குடத்திலிட்ட விளக்காக உள்ளது. அதை உலகெங்கும் ஒளிவீசச் செய்வது நம் கையில்தான் இருக்கிறது.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com