மூலிகைச் செடியிலிருந்து (Artemisia annua) மலேரியாவுக்கான மருந்தைப் பிரித்து எடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததற்காக, கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வரலாற்றில் முதன்முறையாகப் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.
சீனப் பாரம்பரிய மருத்துவம் நெடிய வரலாற்றைக் கொண்டது. அதேநேரம் நம்முடைய சித்த மருத்துவம், அதற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சித்த மருத்துவத்தின் பெருமைகளைப் பலரும் சரியாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டம்தான். சித்த மருத்துவம் பற்றி நம்மிடையே பல்வேறு கற்பிதங்களும் கற்பனைகளும் காலம்காலமாக நிலவி வருவதே இதற்குக் காரணம்.
மூலிகை முக்கியத்துவம்
‘Drug’ என்ற பிரெஞ்சு வார்த்தையின் பொருள், மூலிகை என்பதுதான். பெரும்பாலான ஆங்கில மருந்துகள் மாத்திரைகளாக வந்தாலும், அவை மூலிகைச் செடியிலிருந்து பெறப்பட்டவையே.
நீரிழிவைக் கட்டுப்படுத்தப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் Metformin என்ற மருந்து, Galega Officinalis என்ற மூலிகையில் இருந்தே பெறப்பட்டுவருகிறது என்பது பலரும் அறியாதது. இதய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் Aspirin என்ற வேதிப்பொருள் Spirea Ulmaria என்ற மூலிகைச் செடியிலிருந்து தோன்றியது. சங்க இலக்கியங்களில் பெண்ணின் கைவிரல்களுக்கு ஒப்புமை கூறப்பட்ட, நம் ஊர்களில் விளைவிக்கப்படும் செங்காந்தள் (Gloriso Superba) என்ற கண்வலிக்கிழங்கில் இருந்து Colchinine என்ற வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்பட்டு Gout என்ற நரித்தலை வாதத்துக்கு மருந்தாகிறது.
ஆடாதோடையிலிருந்து பெறப்பட்ட Bromhexine என்ற வேதிப்பொருள் சளியைக் கரைத்து வெளியேற்றப் பயன்படுகிறது. மூலிகையிலிருந்து தோன்றிய ஆங்கில மருந்துகளும் மூலிகை வேதிப்பொருட்களும் வேறு பெயர்களில் சந்தைப்படுத்தப்படுவது இன்றுவரை தொடர்கிறது. செங்காந்தளும் ஆடாதோடையும் சித்த மருத்துவத்தில் நீண்டகாலமாக இதே சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருபவை.
திரிகடுகின் புது வடிவம்
அதேபோல, ஆங்கில மருந்துகளுடன் இணைந்து தரப்படும் மூலிகை வேதிப்பொருட்களைப் பார்ப்போம். காசநோய்க்குப் பயன்படும் கூட்டு மருத்துவச் சிகிச்சையில் Rifambicin என்ற மருந்துடன் திப்பிலியின் piperine என்ற வேதிப்பொருளை இணைந்து வழங்கும்போது, வழக்கமான 400 மி.கிராமைவிட 200 மி.கி என்ற அளவில் குறைத்து வழங்கினால் பயனளிக்கும் என்பதை ஆய்வு செய்து, ஆங்கில மருந்து கம்பெனிகள் சந்தைப்படுத்திவருகின்றன. பன்னெடுங்காலமாகச் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உடலில் விரைவில் சேரும் பொருட்டு, திரிகடுகு என்ற திப்பிலி சேர்ந்த பொடியை வழங்கிவருவதை இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
இறால் மீன், சங்குமூடி (நாங்கணாம்) ஆகியவற்றின் மேலோடுகளில் உள்ள chitin என்ற வேதிப்பொருள், Glucosamine sulphate ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கில மாத்திரைகள் மூட்டுவலிக்கு வழங்கப்பட்டுவருகின்றன. சித்த மருத்துவம் முத்து சிப்பி பற்பம், சங்கு பற்பம் என இதையே பற்பமாக்கி பல காலமாக வழங்கிவருகிறது (சங்குக்கு மூலிகைக் கவசம் இட்டுப் பசுஞ்சாணத் தீயில் சுட்டு எடுப்பதே பற்பம்). சித்த மருத்துவத்தில் பித்தத்தைத் தொடர்ந்த மூட்டுவலிக்கு (Osteo Arthritis) இது வழங்கப்படுகிறது.
சுறாமீனின் முதுகெலும்பு, சித்த மருத்துவத்தின் மீன்முள் என்ற உபரசம் 120-ல் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுறாமீன் அதிகம் பிடிக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டக் குளச்சல், தூத்தூர் மீன்பிடி துறைமுகங்களில் இதைப் பீலிகை என்று குறிப்பிடுகிறார்கள். இதிலிருந்து எடுக்கப்படும் Chondroitin sulphate, மூட்டு, முதுகு வலிகளுக்குத் தற்போது மாத்திரைகளாக விற்கப்பட்டு வருகின்றன.
இப்படியாகச் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகள், விலங்கினப் பொருட்கள், வேதிப்பொருட்கள் பலவும் தற்போது ஆங்கில மருந்து, மாத்திரைகளாகப் புதிய படைப்புபோல வந்துகொண்டிருக்கின்றன.
உழைக்கும் மக்களின் அறிவியல்
அறிவியல் என்பது மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற கருதுகோளே அடிப்படையில் தவறு. கீழ்த்திசை நாடுகளில் நிலவிய அறிவியல், நுண் அறிவியலாக இருக்கிறது என்பது உணர மறந்துவிட்டோம்.
உழைக்கும் மக்களின் அறிவியல் சிந்தனைகளைச் சித்த மருத்துவம் தனதாக்கிக்கொண்டதை ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே உணர முடியும். கரியிட்டு உருக்கினால், மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே உலோகம் உருகும் என்று உலோகவியலுக்கு (Metallurgy) பாடம் புகட்டியது கொல்லன் உலை அறிவியல்தான். அதுவே சித்த மருத்துவம், உலோகங்களை எளிய வெப்பநிலையில் நுண்ணிய துகளாக்கும் அறிவியலாக (Nano particle) மாற்றி காட்டி உழைக்கும் மக்களின் அறிவுச் செல்வத்தைத் தன்னுடையதாக்கிக் கொண்டது, ஓர் உதாரணம்.
மதங்களின் கலவை
சித்த மருத்துவம் ஒரு மதம் சார்ந்த மருத்துவ முறையாகக் கற்பிதம் செய்யப்படுகிறது. இது முற்றிலும் தவறு. அனைத்து மதங்களின் பங்களிப்பையும் சித்த மருத்துவம் தன்னகத்தே கொண்டுள்ளது.
சமண அறிஞர்கள் தங்களுடைய நூல்களுக்குத் தமிழ் மருந்துகளின் பெயர்களைச் சூட்டி (எ.கா. திரிகடுகம், ஏலாதி) பெருமை சேர்த்துள்ளனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வீரமாமுனிவர் ஏழுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவ நூல்களை வெளியிட்டுள்ளார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த யாக்கோப்பு என்ற சித்தர் அதிநுட்பமான மருந்துகள், அவற்றின் செய்முறைகளை இயற்றியுள்ளார். அவரைப்போலவே இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மருத்துவர் அப்துல்லா சாயபு, ‘அனுபவ வைத்திய நவநீதம்’ என்று 10 பாகங்களாக 1,000 பக்கங்களில் சித்த மருத்துவத்துக்குத் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்.
அயல்நாட்டினர் பங்களிப்பு
தமிழரின் தாய் மருத்துவமான சித்த மருத்துவம், தமிழகத்தில் மட்டுமே, அதன் எச்சங்களோடு இருக்கிறது என்பது கற்பிதம். அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிரீன் தமிழ் அறுவை மருத்துவம், தமிழ் சூல் மருத்துவம் பற்றி நியூயார்க் மருத்துவ இதழில் கட்டுரை எழுதியுள்ளார். இது அவருடைய நூலான Life and letters of Dr. Samuel Fisk Green of Green Hill, 1891 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி.யு. போப்பின் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்ற கல்லறை வாசகம் பரவலாக அறியப்பட்டது. அதேநேரம், அமெரிக்காவில் உள்ள வூஸ்டர் கல்லறைத் தோட்டத்தில் ‘தமிழருக்கான மருத்துவ ஊழியர்’ என்ற கல்லறை வாசகம் சாமுவேல் பிஸ்க் கிரீனின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த பாதிரியார் சீகன் பால்குவுடன் வந்த பாதிரியார் ஜான் ஏர்னெஸ்ட் கிரண்ட்லர் சேகரித்த ஆயிரக்கணக்கான நூல்கள், குறிப்பேடுகள், சுவடிகள் ஜெர்மனி நாட்டிலுள்ள ஹாலே அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதன் நூல் பட்டியலைச் சென்னை ராயப்பேட்டை லூத்திரன் திருச்சபை கல்லூரி நூலகத்தில் இன்றைக்கும் காணலாம்.
இதுபோன்று பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகம் வந்து, சித்த மருத்துவத்தைக் கற்று உலகுக்கு எடுத்துச்சென்ற அறிஞர்களையும், அவர்களுடைய பங்களிப்பையும் பட்டியல் இட்டால் எளிதில் முடியாது. அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு நூலகங்களில் பல சித்த மருத்துவச் சுவடிகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com